செம்பட்டு;
விமானத்தில் அமர்ந்த பயணிகள்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை சென்று, அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள், அதிக அளவில் இந்த விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள், பல்வேறு சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.
வாக்குவாதம்
அப்போது திருச்சியில் இருந்து இலங்கை வழியாக தோகாவிற்கு இணைப்பு விமானம் மூலம் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், இலங்கையில் இருந்து தோகாவிற்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.
இந்த நிலையில் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட 40 பயணிகள், விமான நிறுவனத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுக்கு தனியார் விடுதிகளில் தங்குவதற்கு மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்து தருவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பயணிகளை விடுதிக்கு அழைத்துச் செல்லும் பணியை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.