ஆரம்ப சுகாதார நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீழாத்தூர், ஆலங்காடு, வெள்ளாகுளம், அணவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கான அரசு மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர மருத்துவமனையாக வடகாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
ஆனால் இங்கு குறைந்த பட்சம் 4 அல்லது 5 மருத்துவர்கள் முழு நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. ஆனால் தற்போது ஒரே ஒரு மருத்துவர் அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடித்து மாற்று பணிகளுக்கு சென்று விடுவதால் அதன் பின்னர் வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழப்புகள் ஏற்படும்
வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலும் விவசாய பணிகள் தான் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இரவு பகலாக விவசாய பணிக்கு சென்று வரும் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் விவசாய பணியின் போது ஏற்படும் விஷக்கடி மற்றும் வேறு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் போது அருகாமையில் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தான் பலரும் நம்பி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் கூடுதலாக இல்லாததால் அங்கிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் போக வேண்டியுள்ளது. அவ்வளவு தொலைவும், அதற்குள் ஏற்படும் தாமதத்தாலும் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
விவசாயி சாவு
கடந்த சில நாட்கள் முன்பு வடகாடு தெற்கு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியின் போது தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் கலைந்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலரையும் விரட்டி விரட்டி கடித்ததில் காயமடைந்தனர். அவர்களை அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது அங்கு உரிய மருத்துவர்கள் இல்லாததால் முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் கதண்டு கடித்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பேராவூரணி, ஆலங்குடி, புதுக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் வடகாடு முஸ்லிம் பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயி பக்ருதீன் (வயது 58) என்பவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்
மேலும் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு வடகாட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.