சென்னை,
சென்னை புழலை சேர்ந்த எம்.வி.சிவமுத்து என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை பெருநகர பகுதி நிலத்தடி நீர் ஒழுங்குமுறை சட்டம் 1987-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நிலத்தடி நீரை பாதுகாக்காக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கடந்த ஜனவரி 9-ந்தேதி ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். அதில், குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் அளவு மிகவும் குறைந்து வருகிறது. எனவே, தமிழகத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் நிறுவனங்கள் எத்தனை? என்பதை ஆய்வு செய்து, அதில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்களை உடனடியாக இழுத்து மூடிவிட்டு, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு பிளடர் போத்திராஜ், மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.கலைச்செல்வன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பொதுப்பணித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரியலூர், சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் 1,166 நிலத்தடி நீர் எடுக்கும் பிர்காக்கள் (பகுதிகள்) உள்ளன. இதில் 462 பகுதிகளில் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது. 79 பகுதிகள் ஆபத்தான நிலையிலும், 163 பகுதிகள் ஆபத்துக்கு முந்தைய நிலையிலும், 427 பகுதிகள் பாதுகாப்பான நிலையிலும் உள்ளன என்று கூறப்பட்டு இருந்தது.
இதைப்போல தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக அங்கீகாரம் இல்லாமல் 200-க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து நீதிபதிகள், கடந்த ஜனவரி 9-ந்தேதி நாங்கள் பிறப்பித்த உத்தரவில், சட்டவிரோதமாக செயல்படக்கூடிய குடிநீர் நிறுவனங்களை உடனடியாக இழுத்து மூட உத்தரவிட்டோம். ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்தாமல், நிறுவனங்களின் பட்டியலை மட்டும் அரசு தாக்கல் செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்று கூறினர்.
மேலும், தண்ணீரின் அருமை அதிகாரிகளுக்கு தெரியவில்லை. அவர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களை இழுத்து மூடாத மாவட்ட கலெக்டர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தால் என்ன? நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனம் தொடர்பாக அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ஆயிரம் பேர் நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்கேட்டால், அரசு அனுமதி வழங்கிடுமா? என்று சரமாரியாக அரசுக்கு தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
பின்னர், இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் சட்டவிரோதமாக செயல்படக்கூடிய குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இதற்காக மாவட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கையை ஆய்வு செய்யப்படும். இந்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட கலெக்டர்களுக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும். அந்த தொகையை அவர்கள் சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டியது வரும் என்று எச்சரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.