சென்னை,
சட்டசபையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
தங்கம் தென்னரசு (தி.மு.க.):-பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை இந்த இரண்டு துறைகளுமே மிக முக்கியமான துறைகள். பொருளாதார வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகவும் அவசியம் அதற்கு இந்த இரண்டு துறைகள் மிக முக்கியமான ஒன்று. சட்டசபையில் கேள்வி நேரத்தில், பல்வேறு துறைகள் குறித்து அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பொதுத்துறை, நெடுஞ்சாலைத்துறை குறித்து எந்த கேள்விகளும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை குறித்த கேள்விகள் இடம் பெறவில்லையென்றாலும், பல்வேறு மானியக் கோரிக்கைகளின்போது உறுப்பினர்கள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக கேட்கும் கேள்விகளுக்கான உரிய விளக்கத்தை தகுந்த முறையில் அவையில் அளித்து கொண்டிருக்கின்றேன். உறுப்பினர்கள் கடிதம் மூலம் கொடுக்கின்ற கோரிக்கைகளுக்குக்கூட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தங்கம் தென்னரசு:-டெண்டர் விடுவதில் வெளிப்படை தன்மை இல்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-இதற்காக தான் தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே சாலை பணிகள் தொடர்பான ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. இ-டெண்டர் மூலமாக ஒப்பந்தம் கோரப்படுவதால் யார் ஒப்பந்தம் போடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. குறைந்த கோட்பு கேட்பவர்களுக்கு டெண்டர் விடப்படுகிறது.
தங்கம் தென்னரசு:- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வட சென்னை உனக்கு, தென் சென்னை எனக்கு என்பது போன்று ஒரு சிலருக்கு மட்டுமே பிரித்து டெண்டர் கொடுக்கும் நிலை இருக்கிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-இது உங்கள் ஆட்சியில் நடந்திருக்கலாம். எங்கள் ஆட்சியில் இ-டெண்டர் முறை தேர்ந்தெடுக்கிறோம். கடந்த காலங்களில் நீங்கள் யார்? யாருக்கு கொடுத்தீர்கள் என்பது குறித்து என்னிடம் பட்டியல் இருக்கிறது. இ-டெண்டர் முறையில், யார் வேண்டுமானாலும் டெண்டர் போடலாம். அதேபோல பதிவு தபாலில் அனுப்பலாம். யாருமே நிராகரிக்கவே முடியாது. யார் குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோருகிறார்களோ, அவர்களுக்கு தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருக்கிறது. எங்களுடைய அரசை பொறுத்த வரைக்கும், ஒப்பந்தம் வழங்குவதில் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து வருகிறது.
தங்கம் தென்னரசு:-குடிமராமத்து பணியின் நாயகன் என முதல்-அமைச்சரை அழைக்கிறார்கள். ஆனால் இதுவரை குடிமராமத்து பணிகளில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது?, எத்தனை கோடிகள் செலவு செய்யப்பட்டது?, எந்தெந்த இடங்களில் இந்த பணிகள் நடைபெறுகிறது என தற்போது வரை ஒரு பட்டியல் கூட வெளியிடப்படவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-உறுப்பினர் அவர் தொகுதி பக்கமே செல்லவில்லை என்று நினைக்கிறேன். குடிமராமத்து பணிகள் தொடர்பாக தமிழக மக்கள் பாராட்டி வருகிறார்கள். ஆனால் தி.மு.க.விற்கு பாராட்டுவதற்கு மனம் வரவில்லை. தமிழகத்தில் உள்ள 14 ஆயிரம் நீர்நிலைகளை தூர்வார எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் பரிட்சார்த்த முறையில் 100 கோடி ரூபாய் செலவில் 1,513 பணி எடுக்கப்பட்டது.
இதற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் 2017-2018-ம் ஆண்டு 30 மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,523 குடிமராமத்து பணிகளும், 2019-2020-ம் ஆண்டில் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,829 பணிகள் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்பட்டது. இதுவரையில் கடந்த 3 ஆண்டுகளில் 4,865 குடிமராமத்து பணிகள் ரூ.930.76 கோடியில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
2020-2021-ம் ஆண்டில் 34 மாவட்டங்களில் 1,364 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எல்லாமே விவசாயிகள் மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் நீர்நிலைகளில் மழைநீரை நல்ல முறையில் சேமிக்க முடியும். இந்தத் திட்டம் நிறைவடையும்போது 14 ஆயிரம் நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு இருக்கும். ஆகவே உறுப்பினர் தன்னுடைய வல்லமை பேச்சால் எங்களை வீழ்த்த முடியாது. எங்களின் திட்டங்களை யாராலும் மறைக்க முடியாது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஏரிகளும் இதேபோல குடிமராமத்து திட்டத்தின் கீழ் செய்ய வேண்டும் என்று மக்களிடத்திருந்தும், விவசாயிகளிடத்திருந்தும் கோரிக்கை வந்ததன் அடிப்படையில் 1,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.