இறந்து பிறந்த குழந்தை
சென்னையை அடுத்த புழல் காவாங்கரையைச் சேர்ந்தவர் மாரி(வயது 28). இவருடைய மனைவி பவானி. இவர்கள் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது பவானி மீண்டும் கர்ப்பமானார்.
கடந்த 11-ந் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. குழந்தையின் பிணத்தை செங்குன்றத்தை அடுத்த கிராண்ட்லைன் பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான இடத்தில் புதைத்து விட்டு சென்றனர்.
உடல் தோண்டி எடுப்பு
இதையறிந்த அந்த பகுதி மக்கள், இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்பு பகுதியில் குழந்தையின் உடலை புதைத்தது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு கிராண்ட்லைன் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மீண்டும் புதைக்கப்பட்டது.
அப்போது வருவாய் ஆய்வாளர் தனபால், கிராம நிர்வாக அதிகாரி சேகர், செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.