சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவுக்கு ஆதரவாக தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்கள் பாதுகாப்பு இல்லாத, போதைப்பொருள் அதிகமாக உள்ள இந்த அவலத்துக்கு திமுகவே காரணம். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், ஸ்டாலின் சாருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. தமிழகம் இந்த நிலைக்கு திமுகதான் காரணம். திமுக ஆட்சி விரைவில் விடை பெறப்போகிறது என்றார்.
முன்னதாக கொளத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் வேட்பாளரின் பெயரை மாற்றிக் கூறி வாக்கு கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வி.எஸ்.பாபுவுக்கு பதில் மாதவரம் வேட்பாளர் பிரபு பெயர் கூறியதால் சிறிது நேரம் குழப்பான சூழல் நிலவியது. பின்னர் விசில் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
கூட்ட நெரிசல், மைக் வேலை செய்யாததால் சுருக்கமாக பேசி விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சென்னை கொளத்தூரில் 4-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.