ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 7-வது வார்டில் உள்ள கண்ணதாசன் நகரில் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லை. கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி சுமார் 30 வருடங்களாக இந்த பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் போடப்பட்ட சாலை குண்டும், குழியுமாக உள்ள நிலையில் மழை பெய்தால் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
கழிவு நீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தாழ்வான பகுதியில் உள்ள சாலையில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பலவித நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனை கண்டித்தும், உடனடியாக கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை உயரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கக்கோரி கண்ணதாசன்நகர் பொதுமக்கள் நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், அதிகாரி பங்கஜம் ஆகியோர் பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேரூராட்சியின் நிதிநிலை சீரானதும் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலையின் உயரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.