திருத்தணி,
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
திருத்தணி அரக்கோணம் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டியபோது இந்திரா நகர் பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களாக இந்திரா நகருக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கடந்த ஆறு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யாததால் எங்கள் பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
டிராக்டரில் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. மேலும் தெருக்குழாயில் வரும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாமல், மாசு கலந்து வருவதால் உபயோகப்படுத்த முடியவில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் நேரில் வந்து பொதுமக்களிடம் 2 நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்குவதாக உறுதி கூறினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.