சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது அங்கு நடந்த நிகழ்வுகள் காட்சி பதிவுகளாக ஒரு தலைப்பட்சமாக எடிட் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. நேற்று இது தொடர்பான கேள்விக்கு திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் பதிலளிக்கையில், அவர்களே எடிட் செய்து, சேர்க்க வேண்டியதை சேர்த்து, அனுப்பியிருக்கிறார்கள். இதற்கு தான் நாங்கள் நேரடி ஒளிப்பரப்பு கேட்கிறோம். அவ்வாறு செய்திருந்தால் உண்மை வெளியே வந்திருக்கும் என்றார்.
இதுதொடர்பாக டைம்ஸ் நவ் வெளியிட்டு உள்ள டுவிட்டை (சட்டசபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்பதில் திமுக மற்றும் அதிமுக கவனமாக உள்ளது - சுமந்த் சி ராமன்) இணைத்து கருத்து பதிவு செய்து உள்ள நடிகர் அரவிந்த்சாமி, "அது ஏன் அவர்கள் விருப்பமாக இருக்க வேண்டும்? ஏன் சபாநாயகரின் விருப்பமாக இருக்க வேண்டும்? மக்களுக்கு சட்டப்பேரவையில் நடப்பதைப் பார்க்க, எம்.எல்.ஏக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நேரலையில் பார்க்க, கேட்க உரிமை இருக்கிறது.
எந்தவித எடிட்டிங்கும் இல்லாமல் சட்டப்பேரவையில் நடப்பதை மக்கள் அப்படியே பார்க்க வேண்டும். மக்களுக்கு வாக்களிக்க உரிமை இருக்கிறதென்றால், என்ன நடக்கிறது என்று பார்த்து முடிவெடுக்கவும் உரிமை இருக்கிறது" என்று தெரிவித்து உள்ளார்.