தமிழக செய்திகள்

திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் முடிவெடுத்துவிட்டனர்; மதுரையில் பிரதமர் மோடி பேச்சு

பணம் திமுகவுக்கு, பிரச்சினை மக்களுக்கு இதுதான் திமுக மாடல் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்

மதுரை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மதுரையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று தமிழ்நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக வழிபாடு நடத்தினேன். ஆனால், திருப்பரங்குன்றம் கோவில் வழிபாடு செய்தபோது எனது மனம் மிகவும் வலித்தது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி உயிர்நீத்த முருக பக்தன் பூர்ணசந்திரனின் நினைவு வந்தது. பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதி மற்றும் அவர்களின் 2 பிள்ளைகளை சந்தித்தேன். அவர்களின் கவலைகளை உணர்ந்தேன் அவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்தேன். பூர்ணசந்திரனின் ஆன்மா சாந்தியடைய கடவுள் முருகனை பிரார்த்திக்கிறேன். மதுரை தமிழுக்கும், மல்லிகை பூவுக்கும் புகழ்பெற்றது.

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென திமுக கனவு காண்கிறது. ஆனால், இவ்வளவு மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது திமுகவின் கனவு பலிக்காது என்பது தெரிகிறது.

இந்த தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையாகும். திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவரும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்த அரசு தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக அமையும். தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்தது. திமுக குடும்ப ஆட்சி செய்கிறது.

மதுரை எம்.ஜி.ஆர். உடன் நின்றது. இதனால் தான் திமுக ஒருபோதும் மதுரையை விரும்பவில்லை. மதுரையில் மாபியா முறையிலான அரசியலை திமுக கொண்டுவந்தது. மோசமான சாலைகள், மோசமான கழிவுநீர் கால்வாய் வசதிகளை கொடுத்தது.

சுத்தத்தில் மதுரையை தேசிய அளவில் அடிமட்டத்திற்கு திமுக கொண்டு சென்றது. ஊழல் காரணமாக மதுரையில் திமுக மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதுதான் திமுக மாடல். பணம் திமுகவுக்கு, பிரச்சினை மக்களுக்கு இதுதான் திமுக மாடல்.

திமுக ஏழைகளுக்காக வேலை செய்யவில்லை. பிறர் ஏழைகள் வேலை செய்தவதையும் திமுக அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றி பேசும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் கும்பல்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தவுடன் சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்படும். குற்றவாளிகள், போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

என்றார்.