தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்த நிலையில் இந்த இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றுது. இதில், பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், சமூக ஆர்வளர்கள், அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் பெரும்பாலான மக்கள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என பெரும்பாலான மக்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.