தமிழக செய்திகள்

80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்ற புதிய முறையை எதிர்த்து வழக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்ற புதிய நடைமுறையை எதிர்த்து தி.மு.க., உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தேர்தலின்போது வெளியூர்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பார்கள். இதேபோல, 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் தபால் மூலம் ஓட்டு போடும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, தேர்தல் அதிகாரி இவர்களது வீட்டிற்கு நேரில் சென்று வாக்குச் சீட்டை வழங்குவார்கள்.

இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 86 வயது முதியவர் துரை, மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுக்களில், 80 வயதுக்கு மேலானவர்களை சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை. இந்த புதிய நடைமுறை கள்ள ஓட்டுக்கு வழி வகுக்கும். இதுசம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் விடுதலை, சண்முகசுந்தரம், பி வில்சன் ஆகியோர் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், தபால் மூலம் ஓட்டு போடும் புதிய நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

மூத்த வக்கீல் வில்சன் வாதாடும்போது, இந்த புதிய நடைமுறை காரணமாக ரகசிய வாக்களிக்கும் முறை கடுமையாக பாதிக்கப்படும். 30 சதவீதம் பேர் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்ய நேரிடும். இதில் மிகப்பெரிய முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டால் இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. எனவே இந்த புதிய நடைமுறைக்கு தடை விதித்ததுடன், தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார்.

இவர்களது வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையம் தரப்பு கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறினர். பின்னர், இந்த வழக்குகளுக்கு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்டனர்.