சென்னை,
வங்கக் கடலில் உருவாகியுள்ள, நிவர் புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட உள்ளது.
இந்நிலையில் இன்று நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வந்தாலும், அதிலிருந்து வரும் அதிகப்படியான நீரை அடையாறு ஆற்றில் திறந்து விட முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் அவ்வாறு திறந்துவிடும் போது அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்திறப்பு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.