தமிழக செய்திகள்

பெரம்பூர்: வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அலுவலர் ஆய்வு

பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

சென்னை,

பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், வியாசர்பாடி, ராணி அம்மையார் தெருவில் உள்ள குழந்தைகள் மையத்திலும், கருணாநிதி சாலையில் உள்ள குழந்தைகள் மையத்திலும், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி, எழில் நகர், சந்தோஷ் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடிக்குச் செல்லும் குறுகலான பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக், இன்று (17.04.2026) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளின்போது புளியந்தோப்பு, காவல் துணை ஆணையர் கே.முத்துக்குமார், பெரம்பூர் மண்டல அலுவலர் ஆ.ராஜ்குமார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.