தமிழக செய்திகள்

கோவையில் பெரியார் நூலக கட்டுமானப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் 2024-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

கோவை,

கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.2.2026) கோவை மாவட்டம், கோவை வடக்கு, அனுப்பர்பாளையம் கிராமத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுதாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கோவையில் அமைக்கப்படும் என்றும், இதில் உலகத்தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய வளங்களும் இடம்பெறுவது மட்டுமின்றி, விண்வெளி, எந்திரவியல், மெய்நிகர் தோற்றம், இயற்கை அறிவியல் என பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சார்ந்த வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, கோவை மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான 6 ஏக்கர் 98 சென்ட் நிலத்தில் (கோவை வடக்கு, அனுப்பர்பாளையம் கிராமம்) 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் 6.11.2024 அன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த மையத்தின், தரைத்தளத்தில், கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளி பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டி தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்தாம் தளத்தில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஆறாம் தளத்தில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. இம்மையத்தில் மொத்தம் 1,25,000 புத்தகங்கள் மாணவ, மாணவிகளின் நலனுக்காக வைக்கப்பட உள்ளது.

இந்த மையத்தின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள மையத்தின் மாதிரி வடிவமைப்பு, கட்டுமான பணிகள் குறித்த புகைப்படங்கள், புத்தகங்கள் போன்றவற்றையும் பார்வையிட்டு, மையத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரசாமி, கே.இ.பிரகாஷ், முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.