கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர் 31-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

கடைசியாக அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கினை 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது ஜூன் 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 31-5-2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை.

மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ - சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்