தமிழக செய்திகள்

தியேட்டர்கள் திறக்க அனுமதி

ஊரடங்கில் தளர்வாக புதுவையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்கவும் மதுக்கடைகளில் பார்களை செயல்படுத்தவும் அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை இந்தியாவில் தீவிரமாக பரவியது.

படிப்படியாக குறைந்தது

புதுச்சேரி யிலும் தொற்று பாதிப்பு அதிகரித்தது. இதை தடுக்க அரசு கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது.

அதன்பிறகும் தொற்று பாதிப்பு குறையவில்லை. தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மே மாதம் 24-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி மார்க்கெட், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. அரசின் கடும் கட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியது.

மேலும் தளர்வுகள்

அவ்வப்போது ஊரடங்கும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்தவகையில் கடந்த (ஜூலை) மாதம் 16-ந் தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை 15 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தது.

அதன்படி அனைத்து விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. வழிபாட்டு தலங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் வெகுவாக குறைந்தது.

நேற்று நள்ளிரவுடன் ஊரடங்கு நிறைவு பெற்றதையொட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொற்று குறைந்ததால், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி புதுவை மாநில அரசு செயலாளர் விக்ராந்த் ராஜா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு

ஊரடங்கு நிறைவடைவதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி நள்ளிரவு வரை மீண்டும் ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இரவு நேர ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து நீடிக்கிறது. அதேபோல் அரசியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.

காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையும், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்கள் பொதுமக்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்து இருக்கலாம்.

தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். 100 சதவீத ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருப்பது அவசியம்.

மது பார்கள் திறக்கலாம்

மதுபான கடைகள், சாராயக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி திறந்து இருக்கலாம். ஏற்கனவே சுற்றுலா வகை மது பார்களை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அனைத்து வகையான மதுபார்களையும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை, பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்துகொள்ளலாம். இறுதி ஊர்வலங்களில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை 100 பேருடன் நடத்தலாம். அரசால் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.

தியேட்டர்களுக்கு அனுமதி

தியேட்டர்களை 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கலாம். அதேநேரத்தில் தியேட்டர்களில் இரவு 9 மணி வரை மட்டுமே காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு குறித்த அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு