தமிழக செய்திகள்

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது

அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #BusFareHike | #MadrasHighcourt

சென்னை,

தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இந்த கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், வக்கீல் ஆர்.சித்ரவேலு, வி.முனிகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில்

தமிழக அரசு பல்வேறு காரணங்களைக் கூறி அரசு பஸ் கட்டணத்தை கடந்த 20-ந்தேதி முதல் திடீரென உயர்த்தியுள்ளது. இந்த திடீர் பஸ் கட்டண உயர்வால், அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ள 80 சதவீதம் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், இதுநாள் வரை மற்ற போக்குவரத்தைக் காட்டிலும் பஸ் கட்டணம் மட்டும்தான் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது பஸ் கட்டணம் தான் மற்ற போக்குவரத்தைக்காட்டிலும் அதிகமாக உள்ளது.

மேலும், கட்டண உயர்வுக்கு அரசு தற்போது கூறும் பல்வேறு காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஒரேநாள் இரவில் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி முடிவு செய்து, மறுநாள் காலையில் அதிக பஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தனர்.

இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்வோர் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் பெரும் தொகையை பஸ் கட்டணத்திற்கு செலவிட நேரிடுகிறது.

ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் பொதுமக்கள், தற்போது இந்த பஸ் கட்டண உயர்வால் மேலும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த திடீர் பஸ் கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும். பஸ் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. கட்டண நிர்ணய விவகாரங்களில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

பல பொருட்களின் விலை உயர்கிறது; ஒவ்வொன்றிலும் நீதிமன்றம் எப்படி தலையிடமுடியும் என கருத்து தெரிவித்தனர்.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அனைத்து அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளில் கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

#Tamilnadu | #BusFareHike | #MadrasHighcourt

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்