தமிழக செய்திகள்

மதுரை விமான நிலையம் வந்த பியூஷ் கோயல் - நயினார் நாகேந்திரன், எல்.முருகன் வரவேற்பு

மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாட்டில், கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

மதுரை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வரும் மார்ச் 1-ம் தேதி (நாளை) மதுரையில் மாபெரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று இரவு தமிழகம் வருகிறார்.

இதனை முன்னிட்டு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியும், தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இன்று மதுரை விமான நிலையம் வருகை தந்தார். அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இணைந்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மதுரையில் நாளை நடைபெறவுள்ள மாபெரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாட்டில், பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை இன்று மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணன் நயினாருடன் இணைந்து சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்றேன்.” என தெரிவித்தார்.