குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000
திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9 மணி அளவில் திருச்சி வந்தார். அவரை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநில சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மக்களுக்கு பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு தனது பங்காக ரூ.200 வழங்குகிறது. பட்ஜெட்டை அறிவித்த புதுச்சேரி முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி கூறியதைப் போல புதுச்சேரியை சிறந்த புதுச்சேரியாக கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது.
கச்சத்தீவு
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழக கவர்னருக்கும், தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டம். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. கச்சத் தீவில் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுகிறது என கூற முடியாது. அங்கு இலங்கை கடற்படை சார்பில் புத்தர் சிலை அமைத்துள்ளது பற்றி பிரச்சினைகளை கொண்டு வரக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். எம்மதமும் சம்மதம் என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர், டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன்பின் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள இந்திய வானொலி நிலையத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் ஒலிபரப்பு நிகழ்ச்சியை கேட்டார்.
தொடர்ந்து மதியம் 2.30 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தஞ்சை புறப்பட்டு சென்றார்.