மின்னகம்
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:-
மின்சார நுகர்வோரின் குறைகளை தீர்ப்பதற்காக மின்னகம் என்ற சேவை மையம் கடந்த ஜூன் 20-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த மையம் திறக்கப்பட்ட நூறு நாட்களில் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழகத்தில் மின்சார நுகர்வோர் தங்களது மின்சார குறைகளை தெரிவிக்க 107 புகார் எண்கள் இருந்தன. தற்போது ஒரே எண் மூலம் புகார் அளிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைவருக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படும்.
மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம்
மழைக்காலத்தின்போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மின்சார கட்டணம் தொடர்பாக வந்த அத்தனை புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டது. தமிழகம் முழுவதும் 3.63 லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. இவற்றில் பழுது ஏற்பட்டால் அதை நீக்க டிடி என்ற நவீன மீட்டர்கள் ரூ.1,270 கோடி பொருத்தப்பட உள்ளன. இந்தப் பணி நிறைவடையும்போது, வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளும் முடிவடையும்.
ஸ்மார்ட் மீட்டர்
இந்த ஸ்மார்ட் மீட்டர் மூலம் தினசரி பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு, கட்டணம் ஆகிய விவரங்களை நுகர்வோர் தங்களது செல்போன் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு வீட்டில் மின்சார தடை ஏற்பட்டால், அதை மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து கண்காணித்து உடனடியாக சரிசெய்ய முடியும்.தமிழகத்தின் மின்சார தேவையில் 22 சதவீத அளவுக்குத்தான் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய மின்சாரம் மத்திய அரசிடமும், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் வாங்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மின்சார உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1.32 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
சூரியசக்தி மின்சாரம்
இந்த ஆண்டே 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.மின்சார வாரியத்தில் தற்போது 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. மின்சார வாரியத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, இதில் அவசியம், அவசரத்தை கணக்கெடுத்து படிப்படியாக நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் எஸ்.சண்முகம், பகிர்மான இயக்குனர் மா.சிவலிங்கராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.