தமிழக செய்திகள்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் சவாலாக உள்ளது இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இந்த திட்டம் சவாலாக இருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

இஸ்ரோ தலைவர் சிவன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி, சுதந்திர தினவிழா உரையில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் பற்றி அறிவித்தார். 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 15-க்குள் அல்லது அதற்கு முன்பாகவோ இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார். அதற்குள் அந்த திட்டத்தை முடிப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மிகவும் முக்கியமான திட்டமாகவும் உள்ளது.

இந்த திட்டத்தினால் இந்தியாவின் விஞ்ஞானத்துக்கு புது உத்வேகம் கிடைக்கும். 3 மனிதர்களை அழைத்துக்கொண்டு விண்ணுக்கு செல்லும் விண்கலம் 7 நாட்கள் விண்ணில் இருக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் இஸ்ரோவுக்கு சவாலாக உள்ளது. அதை வெற்றிகரமாக நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறோம்.

சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி மாதம் அனுப்பப்படும். சந்திரயான்-2 விண்கலத்தில் சில மாற்றங்கள் மற்றும் சோதனைகள் நடப்பதால் இந்த ஆண்டுக்கு பதிலாக அடுத்த ஆண்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

மேக்-இன்-இந்தியா திட்டத்தின்கீழ் அதிக ராக்கெட்டுகளை தயாரிக்க பிரதமர் நிதி ஒதுக்கி உள்ளார். 2 ஆண்டுகளில் இந்த ராக்கெட்டுகளை தயாரிக்க வேண்டி உள்ளது.

மங்கள்யான் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மங்கள்யான்-2 விண்கலம் தயாரிப்பதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருகிறது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்புகள் குறித்து செயற்கைகோள் எடுத்த படங்கள் மூலம் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி துல்லியமாக கணக்கிடமுடியும்.

செயற்கைகோள் எடுத்த படங்கள் மூலமாக எவ்வளவு மழை இருக்கும் என்பதை கணித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வழிகாட்டும் கருவி தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...