சென்னை,
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு பிளைடெக் என்கிற தனியார் விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த மகிமா கஜராஜ் (வயது 29) என்கிற பெண் விமானிக்கான பயிற்சியை பயின்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை இவர், விமான பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான செஸ்னா 152 ரக விமானத்தில் ஆந்திராவின் குண்டூர் நகரில் இருந்து தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்துக்கு புறப்பட்டார். 2 இருக்கைகளை கொண்ட அந்த சிறிய விமானத்தில் பயிற்சி விமானியான மகிமா மட்டுமே பயணித்தார்.
இந்த நிலையில் காலை 10.50 மணியளவில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள துங்கத்தூர்த்தி கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள காலி நிலத்தில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானம் முற்றிலுமாக உருக்குலைந்து போனது. இதில் விமானத்தில் பயணித்த மகிமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோனது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மகிமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா விமான விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி பெண் விமானி மகிமா பலியானதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.