தருமபுரி,
தருமபுரி மாவட்டம் குட்டூர் கிராமத்தில் வசித்து வந்த தம்பதி துரைசாமி மற்றும் கோசலை. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். மகன், மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு வயதான தம்பதி துரைசாமியும் கோசலையும் 10 ஏக்கர் விவசாய நிலத்திலேயே வாழ்ந்து வந்தனர்.
சொத்து பிரிக்க வேண்டிய நிலை வந்ததால், 10 ஏக்கர் நிலத்தையும் தனக்கே எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் மகன். ஆனால் துரைசாமியும், கோசலையும் மகள்களின் நிலையையும் நினைத்து, 10 ஏக்கரில் 2.5 ஏக்கர் நிலத்தை மூன்று மகள்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள 7.5 ஏக்கர் நிலத்தை மகனுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரம் கொண்ட மகன், தனது மனைவி மகன்களுடன் சென்று பெற்றோரிடம் சண்டை போட்டிருக்கிறார். அப்போது பேரன்கள், மருமகள், மகனால் அந்த முதிய தம்பதியினர் பரிதாபமாக கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர்.
இதன்பின்னர் இருவரின் வாயில் பூச்சி மருந்தை ஊற்றிவிட்டு, தற்கொலை செய்து இறந்து கிடப்பதாக தொப்பூர் போலீசாருக்கு ஆனந்தன் தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் வந்து துரைசாமி மற்றும் கோசலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை முடிவுகள் வந்திருக்கின்றன. அதில், துரைசாமியும் கோசலையும் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து போலீசார், ஆனந்தன் அவரது மனைவி செல்வம், அவர்களது மகன்கள் சக்திவேல், மோகன்குமார் ஆகியோரை கைது செய்தனர். சொத்துக்காக வயதான பெற்றோரை மகனே கொலை செய்த சம்பவம் தருமபுரியை அதிரவைத்துள்ளது.