சேலம்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர பகுதியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் பக்கவாட்டில் ஆத்தூர் பி எஸ் பி அலுவலகம், புறநகர் காவல் நிலையம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த விடுதியில் 105 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை விடுதியின் பின்புறம் உள்ள மரத்தில் தினேஷ் (வயது 16) அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை விடுதியில் உள்ள மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக இருந்துள்ளார். இதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து விடுதியின் காப்பாளரிடம் கூறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக ஆத்தூர் காவல் துறை மற்றும் அருகில் இருந்த கோட்டாட்சியர் சரண்யா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாணவனின் மரணம் குறித்து கோட்டாட்சியர் மற்றும் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் மாணவர்களிடமும் விடுதி காப்பாளரிடமும் விசாரணை நடத்தினர். உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் மாணவனின் மரணம் குறித்து ஆத்தூர் எம்.எல்.ஏ ஜெய்சங்கரன் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கூறும் போது,
இந்த மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு அறையிலும் மின்விசிறிகள் கூட இயங்குவது கிடையாது, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாணவர்கள் எந்த நேரமும் வெளியே சென்று வர வசதியாக உள்ளது. மேலும் விடுதி அருகிலேயே காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகம் இருந்தும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையிலேயே விடுதி இயங்கிவந்துள்ளது என தெரிவித்தார்.
இதுபோல் இங்குள்ள ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு படிக்கும் மாணவர்கள் வெளியே சென்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பணியாற்றி வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.பள்ளி விடுதியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.