தமிழக செய்திகள்

9-ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்ட முயன்ற பிளஸ்-1 மாணவர்

சேரன்மாதேவியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பிளஸ்-1 மாணவர் தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பிளஸ்-1 மாணவர் தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருதலைகாதல்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வரும் பிளஸ்-1 மாணவர், மற்றொரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். அவர் காதலிக்குமாறு கூறியும், மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் அந்த மாணவி பள்ளிக்கூடம் முடிந்ததும் வெளியே வந்து கொண்டிருந்தார்.

தாலி கட்ட முயற்சி

அப்போது அங்கு வந்த பிளஸ்-1 மாணவர் திடீரென்று மாணவிக்கு தாலி கட்ட முயன்றார். இதனால் அதிர்ந்து போன மாணவி கூச்சலிட்டவாறு ஓடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் பயந்துபோன அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மாணவி கூச்சலிட்டபடி ஓடுவதும், மாணவர் தப்பி ஓடுவதும் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

எச்சரிக்கை

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவிக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தாலி கட்டிய சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சேரன்மாதேவியில் மாணவி ஒருவருக்கு பிளஸ்-1 மாணவர் தாலி கட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.