சென்னை,
நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேர் எழுதுகின்றனர். அந்த வகையில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுத உள்ளனர். மேலும், சிறைத்தேர்வர்களாக 281 பேரும் எழுத உள்ளனர்.
முதல் தேர்வாக இன்று தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 5-ந்தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலத் தேர்வும், அதன்பிறகு ஒவ்வொரு பாடங்களுக்கான தேர்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெற உள்ளன.
பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க பல்வேறு திட்டமிடல்களையும் செய்துள்ளது. அதன்படி, தேர்வறை கண்காணிப்பாளர்களாக 44 ஆயிரத்து 624 பேரும், தேர்வுக் கண்காணிப்பு படையாக 4 ஆயிரத்து 540 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்காக 7 ஆயிரத்து 465 பேர் சொல்வதை எழுதுபவர்களை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இதற்கான தேர்வு முடிவு மே 8-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ி