மரக்காணம்,
கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து ஒரு சில அமைப்பினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வன்னியர்களுக்கு வழங்கிய இந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதனை தொடர்ந்து விசாரனை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழகத்தில் வன்னியர்களுக்கு வழங்கிய வேலை வாய்ப்பு, கல்விக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு வன்னியர் சமூகத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்று கூறி மரக்காணம் இ.சி.ஆர் சாலையில் 50-க்கும் மேற்பட்ட பாமக கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், சாலை மறியல் செய்த பாமக கட்சியினரை கைது செய்து இங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்