ஆலோசனை கூட்டம்
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் களப்பணிகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. புதிய நிர்வாகிகள் நியமனமும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் சத்தமில்லாமல் ஒருபக்கம் அரங்கேறி வருகின்றன.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை.
கருத்துகளை கேட்ட பிரேமலதா
இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி, தேர்தல் களப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் தேர்தல் பொறுப்பாளர்களிடம் பிரேமலதாவும், சுதீசும் கருத்துகளை கேட்டனர்.
அப்போது நிர்வாகிகளில் ஒரு பிரிவினர், அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும்பட்சத்தில், கணிசமான இடங்களை கேட்டுப்பெற வேண்டும்' என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க.வின் நிலையான வளர்ச்சிக்கு தனித்து போட்டியிடலாம்' என்றும் பலர் கருத்துகளை தெரிவித்தனர். பெரும்பாலான நிர்வாகிகள், எந்தச் சூழ்நிலையிலும் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவேகூடாது. அதற்கு நாம் தனியாகவே போட்டியிடுவது நல்லது' என்றும் கருத்துகளை முன்வைத்தனர். மேலும், கடந்த தேர்தலில் கூட்டணியில் அங்கம்வகித்த பா.ம.க. சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை' என்றும் சில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பா.ம.க. இல்லாத கூட்டணியில்...
இந்த கூட்டத்தில் நிர்வாகிகளின் அனைத்து கருத்துகளையும் கேட்ட பிரேமலதாவும், சுதீசும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். குறிப்பாக, பா.ம.க. இல்லாத கூட்டணியில்தான் தே.மு.தி.க. நிச்சயம் அங்கம் வகிக்கும்' என்று உறுதிபட தெரிவித்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. நமது முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டது' என்று ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தர்மத்தின்படி பா.ம.க. போட்டியிட்ட தொகுதிகளில் தே.மு.தி.க. விசுவாசத்துடன் உழைத்து பிரசாரம் செய்தது. ஆனால் தே.மு.தி.க. போட்டியிட்ட தொகுதிகளில் அந்த விசுவாசத்தை பா.ம.க. காட்டவில்லை. அதனால்தான் பல இடங்களில் நமது வெற்றிவாய்ப்பு பறிபோனது' என்றும் பிரேமலதாவும், சுதீசும் பேசினர்.
தனித்துப் போட்டியிடவும் தயார்
2011-ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டது. அதுபோலவே நடைபெறவுள்ள தேர்தலிலும் 41 தொகுதிகள் தரும் கட்சியுடனே தே.மு.தி.க. கூட்டணி வைக்கும். இல்லையென்றால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்.
கட்சித் தலைமையின் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை நீங்கள் ஒருமனதாக ஏற்று உழைக்கவேண்டும். பூத்' கமிட்டிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வெற்றிக்காக தீவிரமாக உழைக்கவேண்டும். நமக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. அந்த வெற்றியை கடின உழைப்பு, தீவிர களப்பணியால் சாத்தியமாக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஒரு முக்கிய முடிவை நாளை (இன்று) விஜயகாந்த் வெளியிட இருக்கிறார். அந்த முடிவின்படி நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும்' என பிரேமலதாவும், சுதீசும் தெரிவித்தனர்.
இன்று முக்கிய முடிவு
இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை 4.20 மணிக்கு முடிவடைந்தது. சுமார் 5 மணி நேரம் இந்தக் கூட்டம் இடைவெளியின்றி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்-பிரேமலதா திருமண நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தேர்தல் குறித்த முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா தெரிவித்துள்ளது கட்சி நிர்வாகிகள்-தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.