சேலம்:
வெள்ளிப்பட்டறை அதிபரை 4-வதாக மணக்க வைத்த புரோக்கர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளிப்பட்டறை அதிபர்
சேலம் இரும்பாலையை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க வெள்ளிப்பட்டறை அதிபருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க பெண் தேடினர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு புரோக்கர்கள் என்று கூறி வெள்ளிப்பட்டறை அதிபரின் பெற்றோரை சிலர் அணுகினர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பெற்றோரை இழந்த பெண் உள்ளார். அவரை உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறினர்.
இதையடுத்து பெண்பார்க்கும் படலம் முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளிப்பட்டறை அதிபருக்கும், சூளகிரியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்தை பதிவு செய்ய ஆதார் கார்டை பெண்ணிடம் கேட்ட போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனது தெரியவந்தது. பணத்திற்காக பெண் வீட்டார் போன்று புரோக்கர் கும்பல் மோசடி செய்து வெள்ளிப்பட்டறை அதிபரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகினர்.
தீவிர விசாரணை
இது குறித்து இரும்பாலை போலீசில் வெள்ளிப்பட்டறை அதிபரின் பெற்றோர் புகார் கொடுத்தனர். முதல் கட்ட விசாரணையில் 30 வயது ஆகியும் திருமணம் ஆகாதவர்களை குறி வைத்து அணுகி கமிஷன் தொகை பெறுவதற்காக புரோக்கர்கள் என்று கூறி மோசடி கும்பல் செயல்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான புரோக்கர் கும்பலை சேர்ந்தவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஆகிய இடங்களில் புரோக்கர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.