திருபுவனை
திருபுவனை அருகே ஆசிரியையிடம் தங்கசங்கிலியை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தங்கசங்கிலி பறிப்பு
திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையம், ஜெயநகரை சேர்ந்தவர் அமுதா (வயது 58). மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.
நேற்று பள்ளிக்கு சென்று விட்டு தன்னுடன் வேலைபார்க்கும் ஆசிரியை லாவண்யா (35) என்பவருடன் வீட்டுக்கு நடந்து சென்று சென்று கொண்டிருந்தார். திருபுவனை கடைத்தெரு அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென லாவண்யாவின் கழுத்தில் கிடந்த தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அவர் தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அமுதா அவர்களை தடுக்க முயன்றார். அப்போது மர்மநபர்கள் அமுதா அணிந்திருந்த 2 பவுன் தங்கசங்கிலியை பறித்ததுடன் அவரை கீழே தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். தங்கசங்கிலியை பறித்ததில் அமுதாவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து திருபுவனை போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு, குற்றவியல் போலீசார் வீரபாலு பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கடைவீதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் குற்றவாளிகள் உருவப்படம் பதிவாகி இருந்தது. இைத துருப்புச் சீட்டாக வத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.