சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இங்குள்ள பல்வேறு இடங்களை சுற்றிபார்ப்பதற்காக நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் அடிவார பகுதியில் ஆர்வ மிகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களில் பாட்டை போட்டு அதிக சத்தத்துடன் கூச்சல் போட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசாருக்கும் புகார்கள் சென்றன. மேலும் கடந்த ஆண்டு அப்பகுதியில் அடிதடி சம்பவங்களும் நிகழ்ந்தது.
இதனால் கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளியில் புறக்காவல் நிலையம் அமைப்பது என்று போலீசார் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அங்கு நாள்தோறும் 2 போலீசார் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கென ஒரு அலுவலக கட்டிடம் இல்லாததால் அங்குள்ள நுழைவுவாயில் அருகில் கடைகளுக்கு இடையே காணப்படும் காலியிடத்தில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்துள்ளனர். இரவு நேரத்திலும் இதே நிலைதான் உள்ளது. எனவே அடிவார பகுதியில் புறக்காவல் நிலையத்துக்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.