தமிழக செய்திகள்

கடலூர் அ.தி.மு.க. அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

இன்று காலை கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் தனது ஆதரவாளர்களுடன் வருவதாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் பின்னர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 47 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்கிடையில், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் தலைமையிலும் இரு அணிகள் உருவாகின. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில், தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்வைத்தார்.

இந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 22 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதன் மூலம் 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை உறுதி செய்து ஆட்சியைத் தொடர்ந்து வருகிறது.

இதையடுத்து, கட்சித் தீர்மானத்தை மீறி அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத், தற்போதைய எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் உள்ளிட்ட பலரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக எம்.சி. சம்பத்தின் சகோதரர் எம்.சி. தாமோதரன் நியமிக்கப்பட்டார். மேலும் புவனகிரி, திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கான கூடுதல் பொறுப்புகள் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் பல நிர்வாகிகள் இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் தனது ஆதரவாளர்களுடன் வருவதாக தகவல் வெளியானது. அதேபோல், புதிய மாவட்ட செயலாளர் எம்.சி. தாமோதரன் தரப்பினரும் அங்கு வர உள்ளதாக தகவல் பரவியது.இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் அலுவலகத்திற்கு வந்தால் மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால், இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் கட்சி அலுவலகம் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், அப்பகுதியில் யாரும் கூட்டமாக திரள்வது அல்லது தேவையற்ற குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் கடலூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. கட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதை அறிந்த அலுவலக ஊழியர் தானாகவே அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.