தர்மபுரி,
தர்மபுரி சோகத்தூர் அருகே மாவட்ட சிறை உள்ளது. இந்த சிறையில் தற்போது 60 கைதிகள் உள்ளனர். சேலம், கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கவுதம் (26), சண்முகம் (22), சவுந்தர் (23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இவர்கள் அங்கிருந்த கைதிகள் மற்றும் சிறைக்காவலர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் தங்களை மீண்டும் சேலம் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பை எடுத்து சிறைக்குள் இருந்த 'டியூப் லைட்'டை உடைத்து உள்ளனர். அப்போது டியூப் லைட் உடைந்து சிதறிய கண்ணாடி துண்டுகளை பயன்படுத்தி தங்கள் கையில் கிழித்து லேசான காயத்தை ஏற்படுத்தி கொண்டு சிறை அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த 3 பேருக்கும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டரை வரவழைத்து சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறையில் பொருட்களை சேதப்படுத்தியது. அரசு பணியை செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக சிறை சூப்பிரண்டு சிவபெருமாள் அந்த 3 கைதிகள் மீதும் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 3 சிறை கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபகாலமாக சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் நடக்கும் நிலையில், தர்மபுரி சிறையில் தங்களை காயப்படுத்தி கொண்ட கைதிகள் சிறை அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.