தமிழக செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உருக்கமான கடிதம்

சென்னை விசுவ இந்து பரிஷத் அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஆயுதப்படை போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர் சேகர் (வயது 47). இவர் விசுவ இந்து பரிஷத் (தமிழ்நாடு) நிறுவன தலைவர் வேதாந்தத்திடம் பாதுகாப்பு அதிகாரியாக பணி செய்து வந்தார். நேற்று மாலை சென்னை தியாகராயநகர், ராமானுஜம் தெருவில் உள்ள விசுவ இந்து பரிஷத் அலுவலகத்தில் உள்ள காவலர்கள் ஓய்வு அறையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் உட்கார்ந்திருந்தார்.

மாலை 5.45 மணி அளவில் ஓய்வு அறையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் ஓடிச் சென்று பார்த்தனர்.

அங்கு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தான் வைத்திருந்த பிஸ்டல் ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் தனது தலையின் இடது பக்கத்தில் துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டிருப்பது தெரிய வந்தது. தலையில் பாய்ந்த குண்டு தலையை துளைத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டது.

இது பற்றி தகவல் கிடைத்ததும், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகிரண்பிரசாத், உதவி கமிஷனர் கலியன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சபாரி உடையில் இருந்த சேகரின் உடல் தடய அறிவியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

தற்கொலைக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். சொந்தமாக வீடு கட்ட வங்கியில் ரூ.25 லட்சம் கடன் வாங்கி இருந்ததாகவும், அந்த கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் இந்த பரிதாப முடிவை எடுத்துள்ளதாகவும், அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் சேகர் 1994-ம் ஆண்டு போலீஸ்காரராக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். சென்னை மதுரவாயலில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பெயர் சங்கீதா(45). ஒரு மகன், மகள் உள்ளனர். சேகர் இறந்த செய்தி கேட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது