கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா அம்மாள் (வயது 70). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். 3 மகள்களுக்கும், மகனுக்கும் திருமணமாகி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் சொந்த கிராமத்திலேயே தனிமையில் வாழ்ந்து வந்த யசோதா அம்மாள் தனக்கு தெரிந்த நபர்களுக்கு குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், கலா தம்பதி. விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு பசுபதி (28), சதீஷ் என்ற சக்திவேல் (25) என 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களும் போலீஸ்துறையில் பணிபுரிகிறார்கள். பசுபதி தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
சதீஷ் திருவாரூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் யசோதா அம்மாளின் உறவினார்கள்.இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை யசோதா அம்மாள் மர்ம நபர்களால் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது பற்றி தகவல் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வட்டியை கேட்டு தொந்தரவு
இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். யசோதா அம்மாள் யார் யாரிடம் தனது செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார், கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் ஒரு திடீர் திருப்பமாக யசோதா அம்மாளின் உறவினரான ஆயுத படை போலீஸ்காரர் சதீஷ்தான் அவரது தலையின் மீது அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதீசை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது சதீஷின் குடும்பத்தினர் யசோதா அம்மாளிடம் கடன் வாங்கி இருந்ததும், அதற்கான வட்டியை கேட்டு தொந்தரவு செய்ததால் சதீஷ் யசோதா அம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் அம்மிக்கல்லை தலையில் போட்டு முகத்தை சிதைத்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
கைது
மேலும் சதீஷின் செல்போனை போலீசார் ஆராய்ந்து பார்த்தபோது, பல இளம் பெண்களுடன் இவர் ஆபாசமாக இருந்ததும், பல பெண்களை தன்னுடைய வலையில் விழவைத்து மிக சொகுசான வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் யசோதா அம்மாளை கொலை செய்துவிட்டு அவர்கள் வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரத்தையும், 17 பவுன் நகைகளையும் கொள்ளை அடித்ததையும் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
போலீசார் சதீசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யசோதா அம்மாளை கொடூரமாக கொலை செய்துவிட்டு சதீஷ் அதே ஊரில் இருந்து கொண்டு எதுவுமே நடக்காதது போல வழக்கம் போல நடமாடி வந்துள்ளார்.