தமிழக செய்திகள்

அச்சு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள்; 2 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் - தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு நாளன்றும் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளன்றும் அச்சு ஊடகங்களில் எந்த விளம்பரத்தையும் வெளியிட முடியாது.

சென்னை,

தேர்தல் காலகட்டங்களில் அதுதொடர்பான விளம்பரங்களை வெளியிடலாம். ஆனால் அதற்கான முன்அனுமதியை மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (எம்.சி.எம்.சி.) முன்சான்றளிப்பு பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றளிப்பை பெறாமல், எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, அமைப்போ அல்லது நபரோ வாக்குப்பதிவு நாளன்றும் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளன்றும் அச்சு ஊடகங்களில் எந்த விளம்பரத்தையும் வெளியிட முடியாது.

தனிநபர்கள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள், விளம்பரங்களுக்கான சான்றளிப்பிற்கு மாவட்ட எம்.சி.எம்.சி. குழுவிடம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைத் தலைமையிடமாகக் கொண்ட அனைத்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், விளம்பரங்களுக்கான சான்றளிப்பிற்கு மாநில அளவிலான எம்.சி.எம்.சி. குழுவிடம் விண்ணப்பிக்கலாம்.

அச்சு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு முன் சான்றளிப்பு அனுமதி கோரும் விண்ணப்பதாரர்கள், விளம்பரம் வெளியிட திட்டமிடப்பட்ட தேதிக்கு குறைந்தது 2 நாட்களுக்கு முன்னதாக - எம்.சி.எம்.சி. குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதுபோன்ற விளம்பரங்களை ஆய்வு செய்து முன்சான்றளிக்கத் தயார் நிலையில் குழுக்கள் உள்ளன. இந்தத் தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.