தமிழக செய்திகள்

வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 6 நாட்கள் போட்டியிடும் வார்டுகளை முடிவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் போட்டியிடும் வார்டுகளை முடிவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

ஒரே கட்ட தேர்தல்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 கவுன்சிலர்கள், 138 நகராட்சிகளில் உள்ள 3,843 கவுன்சிலர்கள், 490 பேரூராட்சிகளில் உள்ள 7,621 கவுன்சிலர்கள் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கு முன்பாகவே வேட்புமனு தாக்கல் தொடங்கியதால், விருப்பமனு பெறும் இடங்கள் ஆள் இல்லாமல் காற்று வாங்கியது.

6 நாட்களே இருக்கிறது

ஆளுங்கட்சியான தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சு வார்த்தையை நேற்று அவசரமாக தொடங்கின. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 4-ந்தேதி முடிவடைய உள்ள நிலையில், இன்னும் 6 நாட்களே இருப்பதால், போட்டியிடும் வார்டுகளை முடிவு செய்து வேட்பாளர்களையும் ஓரிரு நாளில் அறிவிக்க எல்லா கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிலை

இதேபோல், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பிற கூட்டணி கட்சி நிர்வாகிகள் இன்று (சனிக்கிழமை) சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 20 சதவீத இடங்களை கேட்கிறது. மாநகராட்சி மேயர் பதவியில் திருச்சி, சேலம் ஆகியவற்றை எதிர்பார்க்கிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 20 வார்டுகளை காங்கிரஸ் கட்சி கேட்கிறது. அதற்கான பட்டியலையும் தி.மு.க. தலைமையிடம் வழங்கியுள்ளது.

இதேபோல், தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி. மு.க. ஈரோடு மாநகராட்சியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை மாநகராட்சியையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருப்பூர் மாநகராட்சியையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாநகராட்சியையும் கேட்கிறது. மேலும், சென்னையில் தலா 10 வார்டுகளையும் இந்த கட்சிகள் கேட்கின்றன. இதேபோல், ஏனைய மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் 10 சதவீத இடங்களை கேட்கின்றன. தி.மு.க. கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் 5 சதவீதம் முதல் அதற்கு கீழான இடங்களை எதிர்பார்க்கின்றன.

அ.தி.மு.க. கூட்டணி

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடங்களை கேட்டுபெற திட்டமிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலின்போது இந்த கூட்டணியில் இருந்த பா.ம.க.வும் தற்போது தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், அது தமக்கு சாதகமாக இருக்கும் என்றும் பா.ஜ.க. கருதுகிறது. மேலும், சென்னை, கோவை மாநகராட்சிகளில் கனிசமான இடங்களையும் எதிர்ப்பார்க்கிறது.

மேலும், தே.மு.தி.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக களம் இறங்குவதால், அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பல முனைப்போட்டி நிலவும் என்றும் தெரிகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்