சென்னை,
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது.
அந்த புகாரின் அடிப்படையில், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுபிடித்தது. முறைகேடு உறுதிசெய்யப்பட்டதால் அந்த தேர்வு கடந்த 2018-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதற்கான மறுதேர்வு எப்போது நடத்தப்படும் என்று தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
வாழ்நாள் தடை
அதில் ஏற்கனவே தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் விண்ணப்பிப்பதாக புகார் எழுந்தது. அதனை ஆசிரியர் தேர்வு வாரியம் கவனமுடன் பார்த்துவருவதாக தெரிவித்தது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதித்தது போன்று, இவர்களுக்கும் தடைவிதிக்கப்படுமா? என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியக் குழுவின் கூட்டம் சமீபத்தில் கூடி முடிவை எடுத்தது. அதன்படி, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் தடைவிதித்து இருக்கிறது.