சென்னை,
விவாகரத்துகோரி விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் காரணமாக தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் சங்கீதாவுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர். இதை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது மிக பெரிய குற்றம் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் மு.கண்ணகி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல திரைக்கலைஞருமான விஜய் - சங்கீதா இணையர்களின் விவகாரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரின் நிலைப்பாடு மற்றும் இறுதி முடிவு குறித்து விவாதித்து நீதி வழங்க வேண்டிய பொறுப்பு, அந்த நீதிமன்றத்துடையது. ஒரு குடும்பம் சார்ந்த பிரச்சனைகளில் மூன்றாம் நபர் கருத்து தெரிவிப்பதும், பொதுவெளியில் இழிவாகப் பேசுவதும் தவறானது. அது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது.
திரைக்கலைஞர் விஜய்யின் இணையர் சங்கீதா விவகாரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் தவெக தொண்டர்களின் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் சங்கீதாவின் படங்களை கேலி சித்திரங்களாகவும், ஆபாசமான வார்த்தைகளாலும் இழிவான முறையில் பேசிவருவதும், பதிவுகளிடுவதும் வன்மையான கண்டத்திற்குரியது.
சமீபகாலத்தில், தமிழ்நாட்டில் கட்சியை தொடங்கி, முதல்வர் ஆவேன் என்று கூறி பிரசாரம் செய்து வரும் தவெக கட்சியின் தலைவர் விஜய் அதற்கு உண்டான சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். தவெக தொண்டர்கள் அவ்வாறு தவறான முறையில் சமூக ஊடகங்களில் பிரசாரங்களில் ஈடுபடும்போது அவற்றை கண்டிக்காமல் மவுனம் காப்பது என்பது மிகப்பெரிய தவறு. இது பெண்களின் மீதான இழிவான பார்வை, ஆணாதிக்க சிந்தனை, சமூக பொறுப்பின்மை, வக்கிரக்குணம், மேலாதிக்க சிந்தனை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு சமமாகும். தன் கட்சியின் தொண்டர்கள் குற்றம் செய்வதை கண்டிக்காமல் மவுனம் காப்பது மிகப்பெரிய குற்றம். இத்தகைய போக்குகளை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக அரசியல் கட்சியை வழிநடத்தும் தலைவரான விஜய் இத்தகைய செயல்களில் ஈடுபடும் தொண்டர்களை கண்டிப்பதோடு, பதிவுகளை நீக்க வலியுறுத்தவேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.