

வாஷிங்டன் டி.சி.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்குதல் நடத்தியதில், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதேபோன்று 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
ஈரானிய ஆட்சியால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக அமெரிக்கா ஈரானில் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரான் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, அணுசக்தி திட்டத்தை கைவிட மறுத்துவிட்டது. ஈரானின் ஏவுகணைத் திட்டம் அணு ஆயுத வளர்ச்சியைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. ஈரான் அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் வைத்திருப்பது மத்திய கிழக்குக்கும், அமெரிக்க மக்களுக்கும் அச்சுறுத்தல்.
ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கையின் நோக்கங்கள் தெளிவானவை. ஈரானின் ஏவுகணை திறன்களை அழிப்பது, அவர்களின் கடற்படையை அழிப்பது மற்றும் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை தடுப்பது. ஈரான் அதன் எல்லைகளுக்கு வெளியே இனி பயங்கரவாதப் படைகளுக்கு ஆயுதம் மற்றும் நிதி வழங்குவதை தொடர முடியாது.
போரில் கொல்லப்பட்ட நான்கு அமெரிக்க வீரர்களுக்காக நாடு துக்கப்படுகிறது. அவர்களின் நினைவாக, ஈரானின் பயங்கரவாத ஆட்சி அமெரிக்க மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் அச்சுறுத்தலை நீக்குவதற்காக தளராத உறுதியுடன் இந்தப் பணியை நாங்கள் தொடர்வோம். உலகிலேயே சக்தி வாய்ந்த ராணுவம் அமெரிக்காவிடம் உள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.