சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளான அரிசி, பருப்பு, சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் பணத்துடன் மண்பானை, அடுப்பையும் கொள்முதல் செய்து வழங்கக்கோரி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் சேம.நாராயணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கணபதி, பொருளாளர் மகேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் விநாயகம், ஏகாம்பரம், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சேம.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் வைக்க உதவும் மண்பானையும், மண் அடுப்பும் கொள்முதல் செய்து விலையில்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. அவ்வாறு செய்தால் 40 லட்சம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேறும். அதேபோல், கடந்த 8 மாதங்களாக மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே அவர்களின் வாழ்வாதாரம் கருதி ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.