மின்மிகை மாநிலம்
தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படாத வகையில் பராமரிப்பு பணிகள் நடந்தன. பல்வேறு புயல்கள் தமிழகத்தை தாக்கியபோதும் அ.தி.மு.க. அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விரைவாக மின்வினியோகத்தை சீரமைத்து கொடுத்தது.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்பராமரிப்பு பணி செய்யவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது தவறான தகவல்.
மே 2-ந்தேதி வரை
நாங்கள் முறையாக பராமரிப்பு பணி செய்ததால் தான், கடந்த மே மாதம் 2-ந் தேதி வரை மின்சார வினியோகம் சீராக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மின்சார தேவை
குறைந்துள்ளது. தற்போது சுமார் 14 ஆயிரத்து 500 மெகாவாட் மட்டுமே மின்தேவை உள்ளது.தமிழகத்தில் காற்றாலை மூலம் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. தற்போது 31 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் அளவிற்கு மின்திறன் உள்ளது. அதை அரசு முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிக்கடி மின்தடை
தி.மு.க. அரசு பதவியேற்று 10 நாட்களில் மின்சார வினியோகத்தை சீரமைப்போம் என்று கூறியது. தற்போது பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. மின்உற்பத்தி மற்றும் வினியோகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது துறையை முழுமையாக கவனிக்காததால் இந்த தடை ஏற்படுகிறது.அவர் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அ.தி.மு.க. அரசு சரியாக பராமரிக்கவில்லை, அதனால் மின்தடை ஏற்படுகிறது என்று காரணம் கண்டுபிடித்து தவறான தகவலை தருகிறார். கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தியபோது மின்சார கட்டணம் கணக்கெடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 2 மாதங்களுக்கு முன்பு கட்டிய கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தலாம் என்று அறிவித்தோம்.
கூடுதல் கட்டணம்
தற்போது கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் எடுத்த கணக்கின்படி மின்சார கட்டணத்தை செலுத்த கோருகின்றனர். மே மாதம் கோடை காலம் என்பதால் பலருக்கும், அதிகப்படியான மின்சார கட்டணம் வந்துள்ளது.அந்த தொகையை
தற்போது செலுத்த சொல்வதால், கூடுதலான கட்டணத்தை செலுத்த முடியாமல் பலரும் தினசரி மின்வாரிய அலுவலகங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.