சென்னை,
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் இறுதியில் பெருமழை பெய்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. ஏரி, குளங்கள், மழைநீர் வடிகால்கள் எதுவும் சரியாக தூர்வாரப்படாமல் இருந்ததை அந்த பேரிடர் வெளிச்சம்போட்டுக் காட்டியது. கூவம் போன்ற ஆற்றின் கரைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்ததால் ஆற்றில் செல்ல வேண்டிய நீர் ஊருக்குள் சென்றது.
ஒவ்வொரு ஆண்டிலும் சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்கிக் கிடப்பதும், வாகனப் போக்குவரத்து பாதிப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக மழைநீர் தேங்கும் அதே பகுதியில் தற்போதுவரை மழைநீர் தேங்குகிறது. கொசு உற்பத்தி, நோய் பரவலுக்கும் அதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.
தாக்கிய புயல்கள்
அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி, வர்தா, கஜா, நிவர் போன்ற புயல்கள் வீசி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடையூறுகளை மக்கள் சந்தித்தனர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், ஆறுகள் போன்றவற்றில் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கலெக்டர்களுக்கு அறிவுரை
கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுபோல் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாவட்ட கலெக்டர்கள் அனைவ ரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அவர்களுக்கு அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் மழை கிடைக்கிறது. இதில் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கேற்ற வழிமுறைகளை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஆலோசனை
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர் அதிகாரிகளுடன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு மேல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அனைத்து துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்பார்கள். இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
நகர்ப்புற, ஊரக பகுதியில் குடிநீர், சாலைவசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம், பருவகால சவால்களை திறம்பட கையாளுவது, நீர்நிலை உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள், மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.