சென்னை,
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 9 ஆம் தேதி(செவ்வாய்கிழமை) மாலை டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று வரவேற்றார்.
அதனை தொடர்ந்து 10 ஆம் தேதி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அறிவு என்பது ஒவ்வொரு நபரின் தன்மையையும் கட்டமைக்கும் அடித்தளமாகும். கல்வி மாற்றத்திற்கான ஊக்கியாகவும், இளைஞர்கள் சமூக மாற்றத்தின் மிக சக்திவாய்ந்த அடையாளமாகவும் உள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தில் தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். இதனை முன்னிட்டு சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.