சென்னை,
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2047-க்குள் இந்தியாவை ஒரு “வளர்ந்த நாடாக” மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை அரசு கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்தியா அடைந்த அதிவேகப் பொருளாதார முன்னேற்றத்தையும், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்றும், உலகப் பொருளாதாரத்தில் உலகில் முதலில் உள்ள ஐந்து நாடுகளில் வரிசையில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும்,
சென்ற ஆண்டு கடைசி காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்த ஜிடிபியின் வளர்ச்சி விகிதம் ஒரே ஆண்டில் வேகவேகமாகப் பாய்ந்து முன்னேறி தற்போது 8.2 சதவீதமாக உள்ளது என்றும் மத்திய அரசு கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பற்றி இந்திய மத்திய அரசு அதாவது ஜிடிபி பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை, அதற்கு முன் வைக்கப்பட்டுள்ள தரவுகள் ஆகியவை தரவரிசைப்படி பார்த்தால் சி - பிரிவு தரவரிசை தகுதியிலேயே உள்ளது.
சர்வதேச செலாவணி நிதியம் ஐ.எம்.எப். இந்தியா வெளியிட்டுள்ள ஜி.டி.பி குறித்த அறிக்கையை சி-தரவரிசைப்படி நிராகரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் நாணய மதிப்பானது சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு 91 ரூபாயாக உயர்ந்துள்ளது.
குடியரசு தலைவர் தனது உரையில், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றமே அரசின் முக்கிய நோக்கம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பயணத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்றார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக சமத்துவமின்மை பற்றிய அறிக்கை, பொருளாதார வல்லுநர்களான லூகாஸ் சான்செல், ரிக்கார்டோ கோமஸ்-கரெரா, ரோவைடா மோஷரிப் மற்றும் தாமஸ் பிக்கெட்டி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘உலக சமத்துவமின்மை அறிக்கை 2026’ (World Inequality Report 202) இல் வருமானம் மற்றும் சொத்து குறித்த தரவுகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்தினர் மட்டுமே இந்தியாவின் மொத்த வருமானத்தில் தோராயமாக 58 சதவீதத்தை ஈட்டுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. மக்கள் தொகையில் கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதத்தினர் இந்தியாவின் வருமானத்தில் 15 சதவீதத்தை மட்டுமே ஈட்டுகிறார்கள் என்கிறது அந்த அறிக்கை. இந்தியாவில் சமத்துவமின்மை, வருமானத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை.
செல்வத்தில் உள்ள இடைவெளியும் இன்னும் ஆழமாகி இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்தியப் பணக்காரர்களில் 10 சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் தோராயமாக 65 சதவீதத்தை சொந்தமாகக் கொண்டுள்ளனர்.
இந்த 10 சதவிகிதத்துக்குள், முதல் ஒரு சதவிகிதம் பேர் நாட்டின் மொத்தச் சொத்தில் 40 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர் என்று இந்த ஆய்வு அறிக்கை முன் வைக்கிறது. உண்மை நிலை எவ்வாறு இருக்க, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று மோடி அரசு குடியரசுத் தலைவர் உரையில் தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் முஸ்லிம்கள், ,கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீது கொடூரமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. மாநில அரசுகளின் அதிகாரங்கள் திட்டமிட்டு சூறையாடப்படுகின்றன.
நீதித்துறை, நிர்வாக துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட இறையாண்மை மிக்க அமைப்புகள் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி ஆளும் பாஜக அரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரையின் மூலம் மத்திய பாஜக அரசு தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதை நாட்டு மக்கள் உணர்ந்திருப்பதால் ஏமாற்றி விட முடியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.