சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குச் சென்று தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தில் தவெக ஆட்சி போகிற போக்கைப் பார்த்தால், போகிற வேகத்திலேயே ஆட்சி கவிழ்ந்து விடும்.
இந்த ஆட்சியில் நிர்வாகத் திறமை சுத்தமாக இல்லை. ஊழலும் குறைந்தபாடில்லை. அமைச்சர்கள் யார் யார் எவ்வளவு சொத்து சேர்க்கிறார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஆளுநரிடம் மனு அளிப்போம். இந்த ஆட்சியில் குதிரை பேரம் நடந்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் ஏற்கனவே கூறியிருந்தார். அவரது முடிவுக்காகக் காத்திருப்போம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, 'அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர் போலப் பேசுகிறார். யாரோ ஒருவர் லயோலா மணியிடம் ரூ.5 கோடி தருவதாகக் கூறியதாகவும், அதை அவர் வேண்டாம் என்று மறுத்ததாகவும் சொல்கிறார். இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. இதைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? நேர்மையானவர் என்பதை வெளிப்படுத்துவதற்காக இதைக் கூறுகிறாரா? உண்மையிலேயே அவர் நேர்மையானவர் என்றால், யார் பணம் தருவதாகக் கூறினாரோ, அவரது பெயரைத் தெரிவிக்க வேண்டியதுதானே?
இந்த ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதைச் சரிசெய்யவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை. தவெக ஆட்சியில் பணவீக்கம் அதிகரித்துவிட்டது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றன. தமிழக மக்கள் சினிமா கவர்ச்சியை நம்பி ஏமாந்துவிட்டார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் அரசியல் ரீதியாகத் தயாரானவர்கள். விஜய்யிடம் எந்தவிதமான நிர்வாகத் திறமையையும் பார்க்க முடியவில்லை. இது தமிழ்நாட்டுக்குச் சோதனையான காலமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.