தமிழக செய்திகள்

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 15-ந்தேதி நாகர்கோவிலில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். 18-ந்தேதி கோவையில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கொங்கு மண்டலத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்கிடையே பா.ஜனதா தேசிய தலைவர் நிதின் நபின் இன்று (திங்கட்கிழமை) கந்தர்வகோட்டையில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். தொடர்ந்து தஞ்சாவூரில் நடக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதற்கான பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மத்திய மந்திரிகள் பலரும் பிரசாரத்திற்கு வர உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார். தேர்தல் வியூகம், பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் வேலை உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுக்கு பிரதமர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

தமிழகம் முழுவதும் பா.ஜனதாவுக்கு 5 லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்பவர்கள் 'நமோ' செயலி மூலம் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.