தமிழக செய்திகள்

இலவச பஸ் பயண திட்டத்தில் தனியார் பஸ்களையும் இணைக்க வேண்டும் - உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் கடைசியாக 2018-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.

சென்னை,

இலவச பஸ் பயண திட்டத்தில் தனியார் பஸ்களையும் இணைத்து மானியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பஸ்

தமிழகத்தில், அரசு பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்க இருக்கிறது. அரசின் இந்த திட்டம் பெண்களுக்கு வரப்பிரசாதம் என்றாலும், இதனால் தனியார் பஸ் டிக்கெட் வசூல் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், அரசுக்கு தமிழ்நாடு பஸ் உரிமையாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் கடைசியாக 2018-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அப்போது டீசல் விலை ரூ.63 ஆக இருந்தது. தற்போது டீசல் விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி அனைத்து உதிரிபாக செலவுகளும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, பஸ் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

மானியம்

இந்த நிலையில், பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை தமிழக அதரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இலவச பஸ் திட்டத்தில் தனியார் பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அனுமதித்து, அதற்கு மானியம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், தனியார் பஸ் தொழில் அழிந்து போகாமல் காக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT