திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை இன்று (சனிக்கிழமை) பொதிகை பொறியியல் கல்லூரியில் நடத்துகிறது. அதில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். முகாமுக்கு வரும் இளைஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கலெக்டர் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் மெகா வேலை வாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு, பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த வாய்ப்பை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி, மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் வேதநாயகம், முருகேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உடனிருந்தனர்.